என் நண்பன், ஒரு தொழிலதிபர். என்னை விட ஐந்து வயது இளையவன். ஐந்து ஆண்டுகளுக்கு
முன், அவன் உயிர்க்கொல்லி நோய் ஒன்றால் பீடிக்கப்பட்டு, தெய்வாதீனமாய் தப்பினான். நேரம்
கிடைக்கும் போதெல்லாம், அவனுடன் போனில் பேசுவேன்.
ஒரு ஞாயிறு, காலை 8.00 மணிக்கு அவனுக்கு போன் பண்ணினேன். நண்பனின் மகன் போனை
எடுத்தான். "அப்பா இப்ப பேசமாட்டாரு...' என்றான். "நான் அவனின் <உயிர் நண்பன்...' என்றேன்.
"கடவுளே பேசினாலும், அப்பா பேசமாட்டார். ஏன்னா ஞாயிற்றுகிழமை அப்பா மவுன விரதம்
இருக்காரு...' என்றான்.
இன்னொரு நாள், நண்பனை நேரில் சந்தித்து, இது பற்றி வினவினேன். அதற்கு அவன், "உயிர்
பிழைக்க வைத்த கடவுளுக்கும், எமனுடன் போராடி, என்னுயிரை மீட்ட என் மனைவிக்கும், நான்
உயிர் பிழைக்க வேண்டும் என பிரார்த்தித்த நல்லுள்ளங்களுக்கும் நன்றி செலுத்த, இந்த மவுன
விரதம். இந்த மவுன விரதம், உயிர் காக்கும் தொடர் மருந்தாக செயல்படுகிறது.
"தவிர, மன உறுதியை வளர்க்க, கோபம் குறைக்க, நன்றியுணர்வு பேண, இவ்வுலகில் இருந்தும்,
இல்லாமல் வாழ்ந்து பார்க்க, என் மவுனவிரதம் பயன்படுகிறது...' என்றான். இப்போதெல்லாம்,
வாரம் ஒரு முறை, நானும் மவுன விரதம் இருக்கிறேன்.
— பரந்தாமன், செய்யாறு.
நன்றி : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13319&ncat=2
No comments:
Post a Comment