என் மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அந்த சாக்கில் கிடைத்த விடுமுறையில் இந்த பதிவை எழுதுகிறேன். அவர் வீடு திரும்புவதற்குள் எழுதி முடித்துவிட வேண்டும் என திட்டமிட்டிருக்கிறேன். நான் அவ்வளவு பெரிய சோம்பேறி இல்லை என்பதால் எங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாளுக்குள் இந்த பதிவு வெளிவந்துவிடும் என உறுதியாக நம்புகிறேன்.
பிள்ளையில்லையே என கவலைப்படும் தம்பதிகளை கண்டு நான் குழம்பியதுண்டு. வெறும் பார்வையாளனாக, குழந்தையின்மை எனும் நிலையை அவ்வளவு பெரிய பிரச்சனையாக நான் திருமணத்துக்கு முன்னால் நினைத்ததில்லை. திருமணமாகி மூன்று மாதங்களுக்குப் பிறகு நாங்கள் பெங்களூரில் குடியேறினோம். எங்கள் வீட்டு இடதுபுறத்தில் மணமாகி ஆறுமாதமான ஒரு இணையும் வலதுபுறத்தில் அப்போதுதான் திருமணமான ஒரு இணையும் வசித்தது. ஆறுமாத ஜோடி அப்போதுதான் ஒரு மருத்துவரை சந்தித்து திட்டுவாங்கி திரும்பியிருந்தது (நல்ல மருத்துவர்கள் ஓராண்டுவரை குழந்தையின்மை சிகிச்சையை ஆரம்பிக்க மாட்டார்கள்). அவர்கள், திட்டாமல் உடனடியாக வைத்தியம் பார்க்கும் ஒரு மருத்துவரை சுற்றுவட்டாரத்தில் தேடிக்கொண்டிருந்தார்கள்.
அடுத்த இரண்டு மாதத்தில் என் மனைவி அதே ஆலோசனைக்காக ஒரு மருத்துவரை நாடினார். நீண்டகால மருத்துவமனைப் பணியாளர் என்பதால் எங்கள் அண்டை வீட்டாரைப் போல பேக்குத்தனம் இல்லாமல் டாக்டரை சந்திக்கும் நேக்கு அவருக்கு தெரிந்திருந்தது. அதேநேரத்தில் இந்த குழுவில் கடைசியாக மணமான ஜோடி அவர்களது சொந்த ஊரில் (கடலூர்) மருத்துவரை சந்தித்தது. பெண்ணை அழைத்துச்சென்றது அவரது மாமியார், கடலூரின் மிக பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர். அந்தப் பெண் மணமாகி ஓராண்டு ஆகிவிட்டது என மருத்துவரிடம் சொல்லும்படி அறிவுறுத்தப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டார்.
கிராமம், சிறு நகரம் மற்றும் பெருநகரம் என எந்த பாகுபாடும் இல்லை. மணமாகி ஓராண்டு வரை குழந்தையின்மைக்கு சிகிச்சை எதுவும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனாலும் குழந்தை இல்லையென்றால் ஓராண்டுவரைகூட காத்திருக்க பலராலும் முடிவதில்லை. எனக்குத் தெரிந்த பெரும்பாலான தம்பதிகளை (சமகாலத்தில் என பொருள்கொள்ளவும்) கொஞ்சி விளையாட குழந்தை வேண்டுமே எனும் பேரவா செலுத்துவதாக தெரியவில்லை. தமது புறச்சூழல் தரும் நெருக்கடிக்கு அஞ்சியே அவர்கள் சீக்கிரமாக குழந்தை பேறுவேண்டி மருத்துவமனைக்கும் கோயில் குளங்களுக்கும் ஓடுகிறார்கள்.
மணமான இரண்டாவது மாதத்தில் என்ன ஏதாவது விசேசம் உண்டா என ஆர்வத்துடன் கேட்கப்படும் கேள்வி ஆறாவது மாதத்தில் இருந்து, இன்னுமா இல்லை ?? எனும் சலிப்போடு கேட்கப்படுகிறது. உறவினர்கள் கூடும்போது ஒரே காலகட்டத்தில் திருமணமாகி இன்னமும் கருவுறாமல் இருப்பது யார் யார் எனும் பட்டியல் தயாராகி, அந்த ஒப்பீடு மறக்காமல் குழந்தைக்காக காத்திருக்கும் பெண்களிடம் தெரிவிக்கப்படுகிறது. சொந்த அனுபவத்திலும் நண்பர்களிடம் பெற்ற தகவலடிப்படையிலும் பார்க்கையில் ஏதேனும் குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றுவரும்போதும் அல்லது சொந்த ஊருக்கு சென்று திரும்புகையிலும் குழந்தையில்லாத பெண்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
இது சமூகத்தின் முட்டாள்தனமான எதிர்பார்ப்பு என்பதில் எனக்கு வருத்தம் இருந்தாலும் இது பற்றி கோபப்பட எதுவுமில்லை. ஆனால் இதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் காட்டப்படும் பாரபட்சமே நாம் அதிகம் கவலைப்படவேண்டியது. இன்னுமா இல்லை எனும் கேள்வி ஒரு ஆணிடம் பிரமோஷன் தள்ளிப்போவதற்குண்டான கவலையோடும் பெண்ணிடம் சீக்கிரம் ஏதாச்சும் வைத்தியத்துக்கு வழியப்பாருங்க எனும் எச்சரிக்கையாகவும் கேட்கப்படுகிறது. குறைபாடு இருவரில் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் குழந்தைப்பேறு என்பது ஒரு பெண்ணின் கடமை எனும் அழுத்தமான சிந்தனைதான் அதிகப்படியான அழுத்தத்தை பெண்கள் மீது செலுத்துகிறது.
குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு செல்லும் தம்பதிகளில் முதலில் பெண்களே ஏதேனும் குறைபாடு உள்ளதா என பரிசோதனை செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏதும் பிரச்சனை இல்லை என தெரிந்த பிறகே ஆணுக்கு ஏதேனும் சிக்கல் இருக்கிறதா எனும் பரிசோதனை செய்யப்படுகிறது. சில விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால் ஆகப்பெரும்பாலான இடங்களில் மேலே சொன்ன கதைதான் நடக்கிறது.
இந்தியாவில் சரிபாதி பெண்களுக்கு ரத்தசோகை இருக்கிறது. ஆனால் (தொடர் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு வசதியுள்ள) கருவுற்ற பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு சரியாக இருக்கிறது (மருத்துவமனை வட்டாரங்கள் வாயிலாக கிடைத்த தகவல்). காரனம் வேறொன்றுமில்லை. அவர்களுக்கு இரும்புச்சத்துக்கான மாத்திரையும் உணவுப்பொருட்களும் கவனமாக தரப்படுகின்றன. பிரசவத்துக்கு பிறகு அவர்களது ரத்தசோகை பற்றிய அக்கறை மருத்துவமனைகளுக்கே இருக்கிறதா என தெரியவில்லை.
குடும்ப சண்டை காரணமாக கருவை கலைக்கப்போகிறேன் என சொன்ன மனைவியிடம் என் புள்ளைய கலைச்ச உன்னை கொன்னு போட்ருவேன் என சொன்ன கணவர் ஒருவரை எனக்கு தெரியும். ஆனால் அந்த வசனத்தை சொன்னதற்கு 24 மணிநேரம் முன்பாக அவர் தன் மனைவியை படிக்கட்டில் அடித்து தள்ளிவிட்டிருந்தார். ஆகவே குழந்தை என்பது ஒரு ஆணின் சொத்து, அதனை அழிப்பதானாலும் அந்த உரிமை ஆணுக்கு மட்டுமே உண்டு. மனைவியாகப்பட்டவள் அதனை கொண்டுவந்து கொடுக்கும் டெலிவரி ஆள் மட்டுமே. இதுதான் சமூகத்தின் பொதுக்கருத்து, அதன் வெளிப்பூச்சுமட்டும் இடத்திற்குதக்கவாறு மாறுகிறது அவ்வளவுதான். இந்த அபாரமான கருத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்க ஒரு தமிழ் திரைப்படம்கூட வந்ததாக ஞாபகம்.
இந்த குழந்தை பெறுவது எனும் “தகுதி”க்கு பின்னால் மாபெரும் வியாபாரம் இருக்கிறது. இந்தியாவில் ஏறத்தாழ 15 விழுக்காடு தம்பதிகள் குழந்தையில்லாதவர்கள் (அல்லது நீண்ட நாட்கள் காத்திருப்பவர்கள்). இவர்களை மையமாக வைத்து எல்லா பெரிய நகரங்களிலும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவமனைகள் கனஜோராக இயங்குகின்றன. இல்லாத ஊர்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாடிக்கையாளர்கள் நகரத்துக்கு வரவழைக்கப்படுகிறார்கள். கைராசி டாக்டர்கள் பத்திரிக்கை விளம்பரங்களில் குழந்தை வரத்தின் மகாத்மியங்களை கனிவுடன் விவரிக்கிறார்கள். கவலைப்படாதீர்கள் இப்போது எல்லா குறைகளையும் களைய சிகிச்சை வந்துவிட்டது என தைரியம் சொல்கிறார்கள். துரதிருஷ்டவசமாக பணம் இல்லை எனும் ஒரு குறை கூடுதலாக இருந்து தொலைத்தால் ஆண்டவன் மீது பாரத்தைப்போடும் ஒரே தீர்வு மட்டுமே அவர்களுக்கு உண்டு.
வெறும் பரிசோதனைக்காகவே லட்சத்தைத் தாண்டி செலவு செய்திருக்கிறார்கள் பலர். அதிலேயே மொத்த சேமிப்பையும் தொலைத்துவிட்டு மேல்சிகிச்சைக்கு வழியில்லாமல் போன பலர் இருக்கிறார்கள். மருத்துவத்தின் மீது நம்பிக்கையிழந்தவர்களுக்காகவே அவதாரமெடுத்திருக்கிறார்கள் பல ஜோசியர்கள். ஜோசியர் மீது நம்பிக்கையில்லாமல், ஸ்ரைட்டாக குழந்தைவரம் தரும் கடவுளை சந்திக்க விரும்புபவர்களுக்கு வழிகாட்ட குங்குமமும் சன் டிவியும் இருக்கின்றன. இதெல்லாம் போக கைப்பழக்காத்தாலோ அல்லது தூக்கத்தில் விந்து வெளியேறியோ பின்னாளில் குழந்தை பாக்கியமில்லாமல் போவோரை காப்பாற்ற எல்லா ஊரிலும் முகாம் அமைத்து சேவை செய்யும் நூற்றாண்டு பாரம்பரிய மருத்துவர்களது கணக்கு தனி.
இப்படி ஆயிரக்கணக்காண கோடிகள் புரளும் குழந்தையின்மை சிகிச்சை கொடிகட்டிப் பறக்கும் நம் நாட்டில்தான் உலகின் ஊட்டச்சத்தற்ற குழந்தைகளில் பாதி வாழ்கின்றன. சத்துள்ள உணவு கிடைக்காமல் ஆண்டொன்றுக்கு ஆறரை லட்சம் சிறார்கள் இறந்துபோகின்றார்கள். பின்தங்கிய மாநிலங்களில் சற்றேறக்குறைய 10 சதவிகித பச்சிளங்குழந்தைகள் இறந்துபோகின்றன (கேரளாவைப்போல பீகாரில் குழந்தை இறப்பு விகிதம் 10 மடங்கு- ஒரு உதாரணம்). பேறுகால மரணங்கள் இந்தியாவில்தான் அதிகம். குழந்தை நலன் தொடர்பான யுனிசெஃப் அறிக்கை இந்தியாவை பார்த்து காறித்துப்பாத்துதான் பாக்கி. தடுப்பு மருந்து கிடைக்கிற, பரிசோதனை வாயிலாக எளிதில் கண்டறிய முடிகிற கருப்பை வாய் புற்றுநோய் காரணமாக மட்டும் இந்தியாவில் நாளொன்றுக்கு 200க்கும் மேலான பெண்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள்.
குழந்தையின்மை என்பது மாபெரும் துயரமாக கருதப்படும் ஒரு நாட்டில் மேற்சொன்ன தகவல்கள் ஒரு சிறு சலனத்தைக்கூட ஏற்படுத்தாதது ஏன் எனும் கேள்வி உங்களுக்கு வரவில்லையா?
– பதிவு இத்தோடு முடிகிறது… இதற்குப் பிறகான வாக்கியங்களை வாசிப்பவர்களே நிரப்பிக்கொள்ளும் பொருட்டு.
No comments:
Post a Comment